என்னை அறிந்தால்…!

Posted: February 5, 2015 in General
Tags: ,

pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comநீண்ட நாட்களாகியருக்கும்.! ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன்.

இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.

அம்மா தந்த சூடான தேநீர் அருகில் உள்ளது. பரவசமான பறவைகளை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே இருந்ததால் தேநீர் ஆறியும் விட்டது. ஒரே மடக்கில் மடமடவென குடித்து கோப்பையை கீழே வைத்தேன். இன்னும் சிந்தனையிலேயே உள்ளது, சில நாட்களுக்குமுன் கைபேசியில் வந்த அந்த அழைப்பு. தயானந்து அழைத்திருந்தான்.

678344932-v-formation-bird-migration-cormorant-midair“என்னப்பா? நலமா? என்றேன்.! நலம் சார் .! நம்மாழ்வார் அய்யாவோட முதலாம் ஆண்டு நினைவுதினத்திற்கு போய்ட்டுவந்தேன் சார்.! நிறைய கூட்டம். ஆனா பழைய ஆட்களை எல்லாம் காணலை சார். அப்புறம் இன்னிக்கிதான் நேரம் கெடச்சுது, உங்க ப்ளாக் படிச்சேன் சார். நல்ல எழுத்துநடை வளர்ந்திருக்கு சார் பழைய இடுகைக்கும் கடைசியா பண்ண இடுகைக்கும். தொடர்ந்து எழுதுங்க “ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். தயானந்து நான் கற்பித்த நிறைய சிப்பிக்களில்  நான் கண்டுகொண்ட முத்துக்களில் ஒருவர். இந்த ஒருசில முத்துகளால் தான் உருப்படியாக ஏதாவது வாழ்வில் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் செய்யவேண்டும் என்றும் தோன்றுகிறது.

“முனை” என்று முனைந்து, “தளிர்” என்று வளர்ந்து, தமிழ் மன்றத்தில் நனைந்த அந்த பழைய நினைவுகளோடு, கடந்த ஒரு வருடமாக ஏதும் செய்யாத பெரிய வெறுமை. எதையோ இழந்து கொண்டிருப்பதை எப்போதும் எப்போதும் உணர்ந்து கொண்டே காலத்தை கடத்திச்சென்றுவிட்டேன், கடத்திக்கொண்டிருக்கிரேன்.

புத்தக வாசிப்பு முற்றாக குறைந்துவிட்டது. மறுவாசிப்பிற்காக எடுத்துவைத்த ஆறு புத்தககளும் ஆறுமாதமாய் மாற்றி மாற்றி அடுக்கப்பட்ட படி மேசைமேலே தூங்குகின்றது. வாரந்தோறும் புத்தக விமர்சனம் செய்ய ஆரம்பித்த “ வாசகர் வட்டம்” முதல்வாரத்திலேயே வட்டம் சுருங்கி புள்ளியாகி விட்டது.உள்ளுக்குள் இருந்த அந்த உந்துசக்தி ஏனோ உயிரற்று போய்விட்டது. காரணத்தை தேடியவனாய் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை இப்படி இருக்கலாம்.(??) இல்லை இப்படித்தானிருக்கும். ஊக்குவித்து வழிநடத்திய அந்த முத்துக்கள் போன்று எதுவும் இப்போது என்னருகே இல்லை. இருக்கலாம் , அவர்களை நான் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். கண்டுகொண்டு மனநிறைவுடைய செயல்பாடுகளை உந்தித்தள்ளுவதே இப்போது தேவையென்ற உணர்கிறேன்.

வாசிக்கிற உங்களுக்கு இவை கிறுக்கல்களாக தெரியலாம். கிறுக்குத்தனமான பிதட்ரலாக தோன்றலாம். என்னை அறிய நான் செய்யும் எனக்குதெரிந்த சிறிய முயற்சிகள் இவை. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசைநிகழ்ச்சியில் சொன்னது இன்னும் என்சிந்தனையில் உள்ளது ” ஒருவனுக்கு தன் வாழ்வில் இரண்டு நாட்கள் முக்கியமானது. ஒன்று அவன் பிறந்தநாள். மற்றொன்று அவன் ஏன் பிறந்தேன் என்று உணர்ந்த நாள்”

அந்த நாளைத் தேடித்தான் , நானும் காத்துக்கிடக்கிறேன்..!

Comments
  1. “எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன்”. எழுத்து நடை அருமையாக உள்ளது ஐயா. ஒரு பொறியியல் கல்லூரியில் உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர் கிடைப்பது அரிது.

Leave a comment