புத்துணர்வு !

Posted: October 2, 2015 in Uncategorized

pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.

நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து  வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள்.

இப்போது கொஞ்சம்  இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.

இந்த வரிகளை எழுதும் இந்தக் கணம், மின் விளக்கிற்கு கீழே வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கிறேன். எழுதிகொண்டிருக்கும் வெள்ளைத்தாளின் மேல் திடீரென்று வந்து ரீங்காரமிடுகிறது வண்டுகளும், விட்டில் பூச்சிகளும் .

“மாமா! என்ன பண்றீங்க? படிக்றீங்களா ?” தெருவில் விளையாடிக்கொண்டே வாசல் கதவினருகே  தன்  சைக்கிளை ஓட்டியவாறு கேட்கிறாள் எதிர் வீட்டு ‘நக்ஷத்ரா’. என் புது தோழி.

கையில் ‘செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’ புத்தகத்தை பிடித்தவாறு  , காகிதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் , புது இடத்தின் புத்துணர்வுகளை. விசுவிசுவென வாடைக் காற்று வாசல்வழியே உடலை வருடிக்கொடுக்கிறது.

புத்தகத்தை வாசிக்க மட்டுமல்ல புதிய மனிதர்களை வாசிக்கவும் காற்றுக்கொண்டேன். புதிய உயிர்களையும் நேசிக்க கற்றுக்கொண்டேன்.

புதிய இடம் புதிய அனுபவத்தை மட்டும் தருவதில்லை புதிய அறிவையும் தருகின்றது.

சில்லென்ற காற்று, சிறகடிக்கும் சிட்டுக் குருவிகள், சுற்றத்தில் நிறைய குழந்தைகள், நாங்களும் இந்த உலகத்தில் உரிமைப்பட்டவர்கள் என்று இரவு நேர விலக்கை சுற்றிச் சத்தமிடும் வித்தியாசமான பூச்சிகள், வாசற்கதவில் எட்டிப்பார்த்து வணக்கம் வைத்துச் செல்லும் ஓணானும் அணிலும், பாலிற்காக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை பத்திரமாக பார்த்துக்கொண்டே காலையில் சுவரின்மேல் அமர்ந்திருக்கும் தெருவுக்கே சொந்தமான பூனை, இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகாலாம்.

678344932-v-formation-bird-migration-cormorant-midair

நம்மைச் சுற்றி எத்தனையோ எண்ணிலடங்கா நிகழ்வுகள். அத்தனையும்   ஒன்றை நமக்கு உறுதியாக உணர்த்துகிறது.

உலகம் மிகவும் பரந்துவிரிந்தது. அதில் வாழும் ஒவ்வொரு உயிரும் தனக்கான இடத்தில் பொறுப்பாக  முனைகின்றது.

தினம்தோறும் உணவைத்தேடி காலையில் கூட்டமாக எங்கோ பறந்துசெல்லும் பறவைகளும், வரிசைகளையாமல் மீண்டும் மாலையில் அவைகள் வீடு திரும்பும் அழகும், பார்க்கும் ஒவ்வொருவர்க்கும் ஓராயிராயிரம் பாடங்களை கற்றுத்தருகிறது.

யோசித்துப் பார்க்கிறேன், ஆம்!

எல்லோரும் இங்கே முக்கியமானவர்கள். சரிநிகரான வாய்ப்பைபெற்றவர்கள்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் முனைப்போடு இருப்பதும் முழுமூச்சாய் உழைப்பதும் மட்டும்தான்.

தகுதியானவை மட்டுமே இயற்கையால் தேர்வுசெய்யப்படும். டார்வின் சொன்னது போல ” தக்கன பிழைக்கும்”.

இதோ வந்துவிட்டார் தினம்தோறும் நேரம்தவறாமல் தன்வேலையை செய்யும் திருவாளர். தட்டான்பூச்சி. தடதடவென மின்விளக்கில் அவர்மோதினால் சரியாக சன் டிவியில் தெய்வமகள்   போற்றுபானுங்க.

சரி.! சத்யா பிரச்சனைய இன்னிக்கு எப்டி இழுக்கிறாய்ங்கன்னு போய் பாக்கலாம்.

Comments
  1. கண முன் விரிகிறது காட்சிகள்.. அருமையான எழுத்து நடை..

Leave a comment